விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பின்படி பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக உலகப் புகழ்பெற்ற அங்காளம்மன் ஸ்தலமான மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் இன்று ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் பெண்களுக்கு நுழைவு சீட்டு வழங்கப்பட்டு 108 பெண்கள் திருவிளக்கு ஏற்றி உற்சவர் அங்காளம்மன் முன் விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். இந்த ஆடி பௌர்ணமி தினத்தில் உற்சவர் அங்காளம்மன் சமயபுரம் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த திருவிளக்கு பூஜையின் முடிவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் அங்காளம்மனை வழிபட்டு சென்றனர்.
0 கருத்துகள்